Tuesday, March 24, 2009

தண்ணீர்.....கண்ணீர்.....


அன்று

அடித்துப் பிடித்து

அம்மா குளிப்பாட்டுகையில்

தேவையில்லாமல் அழுதிருக்கிறேன்......

இன்று

காத்து கிடக்கிறேன்

குளியலறை க்யூவில்

இப்போதும் தேவையில்லாமல்

கண்ணோரம் நீர்......

பழமொழியாம் பழமொழி.......


நம்ம கலாட்டா அம்மணி நம்மள பழமொழிகள் இடச் சொல்லி அழைச்சிருந்தாங்க.வர வர பாசக்கார எதிரிங்க தொல்ல தாங்க முடியலப்பா......யோசிக்கப் புடிக்காத நம்மள இப்படியா யோசிக்க வைக்கறது????!!!!ஆனா வகையா வந்து மாட்டின புத்தகத்திலிருந்து இதோ சில பழமொழிகள்.....................



அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது


அற்பக் கோபத்தால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷத்தால் திரும்ப வருமா?


இட்டுக் கெட்டாருமில்லை,ஈயாது வாழ்ந்தாருமில்லை


இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது


உண்டு கொழுத்தால் நண்டுவலை தாங்காது


உறவு போகாமல் கெட்டது;கடன் கேட்காமல் கெட்டது


எதிரி சுண்டெலியானாலும்,எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


எரிகிற வீட்டை அணைக்க கிணறு வெட்ட நாள் பார்த்தானாம்


கடன் இல்லாத கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும்


தன்னை வென்றான் தரணியை வெல்வான்



நான் இந்த பழமொழி பதிவை தொடர அழைப்பது இவர்களை தான்....................


அ.மு.செய்யது


mayvee


கவின்


ஜமால் காக்கா

Monday, March 16, 2009

மது????!!!!!




மது


நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடாமே


சிரிக்கிறார் கிங்ஃபிஷர் மல்லயா


காந்தியின் பொருட்களை வைத்துக்கொண்டு..........

Sunday, March 8, 2009

கிராமமும் நானும்....






எனக்கு கிராமம்னா ரொம்ப பிடிக்கும்.ஆனா நான் இதுவரைக்கும் கிராமம் பக்கமே போனதில்ல...இப்படி தான் நான் புலம்பிட்டிருந்தேன்.இத பார்த்து பரிதாபப்பட்ட நம்ம தோழி(பாசக்கார புள்ள) என்ன அவ ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னா....(ஆஹா சூப்பர் சான்ஸ் புடிச்சிக்கோ வால்ஸ்னு பட்சி சொன்னுச்சு)உடனே எங்க அம்மா அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு (நாங்கள்ளாம் சொல் பேச்சு மீறா புள்ளைங்க....) bagஅ தூக்கிட்டு கிளம்பியாச்சு....

அவங்க ஊர் திருவண்ணாமலை மாவட்டத்துல உள்ள ஜமீன்அகரம்....நான் இருக்குமிடத்திலிருந்து நான்கரை மணி நேர பயணம்.விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு போற வழியில் இருக்கு.....வழில நிறைய மலைகள் மரங்கள்னு பயணம் சூப்பரா இருந்தது....




நாங்க போய் சேர்ந்தது சனிகிழமை மாலை....பக்கா கிராமம்.அங்க போனவுடனே அவங்க கொடுத்த காபிய குடிச்சிட்டு வாசல் கயிற்று கட்டில்ல செட்டிலாயிட்டேன்.சின்ன தெரு.அகலம் ரொம்ப கம்மி....அதனால மக்கள்லாம் அவங்கவங்க வீட்டு வாசல்ல உட்கார்ந்துட்டு அடுத்த வீட்டோடும் எதிர் வீட்டோடும் ஜாலியா பேசிட்டிருக்காங்க...குழந்தைங்க அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் கனெக்ஷன் போட்டு ஓடிட்டு இருந்தாங்க...வேலைகளையும் பகிர்ந்து செய்றாங்க....இரவு சாப்பாடு கொள்ளைப் பக்க தாழ்வாரத்துல நட்சத்திர பார்வையாளர்களுடன்.....









நான் போனது திருவிழா சமயம்.அதனால ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு 12 மணிக்கு எழுந்து கூத்துப் பார்க்க போனோம்.....பாஞ்சாலி சபதம்.பலத்த ஒப்பனைகளோட உரத்த குரல்ல பேசி நடிச்சிட்டிருந்தாங்க..ஆனா எனக்கு ஒன்னுமே புரியல.. :(( வெட்ட வெளிலதான் மேடை போட்டிருந்தாங்க..பயண அலுப்பும் அந்த சத்தமும் சேர்ந்து தலைவலி வந்துவிட பாதியிலேயே வந்துவிட்டேன் :(((








அடுத்த நாள் விடியும் போது நானும் ஃப்ரெஷ்......மதியம் திருவிழா பார்க்கப் போனோம்.ஆடு பலி கொடுக்கறப்போ ஆடு உத்தரவு தரனுமாம்.அந்த பலே ஆடு 20 நிமிஷம் தண்ணி காட்டியது.அப்புறம் எப்படியோ அது தலையை ஆட்டி வைக்க, இவர்கள் ஒரே போடாய் போட்டு விட்டனர்.மேள மோளங்களுடன் சூப்பரா இருந்துச்சு திருவிழா.....





தேரடி வீதியில் தேவதை வந்தா.........






அன்னைக்கு சாயந்திரம் என்ன வயல் பக்கம் கூட்டிட்டு போனா நம்ம தோஸ்து...இரண்டு கல்ல செங்குத்தா நிக்க வச்சு வயலுக்கு entrance மாதிரி செஞ்சிருந்தாங்க.பார்க்க ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு....உள்ள போனா எந்த பக்கம் திரும்பினாலும் பச்ச கலரு சிங்குச்சாதான்.....அவ்வளவு ரம்மியம் அத்தனை அழகு.....ஆழமான கிணறு,பட பட ஜில் ஜில் பம்பு செட்டு,வைக்கோற்போர்,தூரத்து வயலில் ட்ராக்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் குடியானவன்...அப்படியே பாரதிராஜாவின் கிராமம் தான் போங்க......நான் வைக்கப்போர் ஏற போய் இரண்டு தரம் விழுந்து மூன்றாவது முறை ஏறிட்டேன்...அதுக்கு மேல உட்கார்ந்து இளநீர் குடிச்ச சுகமே தனி....தொடர்ந்து பம்பு செட்டில் சுகமான நீராடல் படலம்..... (அங்கங்கே சொருகு முள் குத்திக்கொள்ள கத்திக் கொண்டே வீடு வந்தது தனி கதை...)

















அறுந்த வாலு......






அடுத்த நாள் மஞ்சள் தண்ணீர் ஊத்தும் விழான்னாங்க.....நானும் பல கிராமத்து படங்கள பார்த்திருந்ததுனால பல ஜோடிங்கள பார்க்கலாம்னு எதிர்ப்பார்ப்போட வேடிக்கைப் பார்த்துட்டிருந்தேன்.ஆனா ஒவ்வொரு வீட்டு வாசல்ல நின்னுட்டிருந்ததெல்லாம் ஆயாக்களும் அப்பத்தாக்களும் தான்.......

எல்லாத்தையும் விட அம்மக்களின் கவணிப்பு அருமையோ அருமை....நான் கேட்டதெல்லாம் செஞ்சுக்கொடுத்த ஆண்டிக்கு அநேக நன்றிகள்..புவனாக்காவுக்கும் அன்பு மாமாவுக்கும் ஸ்பெஷல் நன்றி.....


இப்படியாக இரண்டு நாள் சூப்பரா என்ஜாய் பண்ணிட்டு வந்து, அதப் பத்தியே பேசி இங்க நான் விட்ட அளப்பறை தாங்க முடியாம ஒரு கூட்டம் அடுத்த வாரம் அதே கிராமத்துக்கு பேக்கப்பாறாங்க..... :))))



வாணமே எல்லை........


வெள்ளை சிரிப்பும் பிள்ளை வயதும் கொள்ளை இன்பமடி.......